ஓம் திரைப்படம்
ஆந்திர காடுகளில் பல காலமாகத் தடுக்க முடியாத பிரச்சனையாக உருவெடுத்துள்ள செம்மரக் கடத்தலைத் தடுக்க, ஆந்திர வனத்துறையும் காவல் துறையும் இணைந்து ஒரு பிரம்மாண்ட கூட்டு முயற்சியை மேற்கொள்கின்றன. இந்த செம்மரக் கடத்தல் கும்பலின் முக்கியத் தலைவனான மம்மூட்டியையும், அவருக்கு மேலே அடையாளம் தெரியாமல் இயங்கும் உச்சக்கட்ட தலைவனையும் பிடிப்பதற்காக, காவல் துறையிலிருந்து ஒரு ரகசிய ஏஜென்ட்டை (தனுஷ்) அந்த கும்பலுக்குள் ஊடுருவ வைக்க முடிவு செய்கின்றனர்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்; தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் நசரீன் ஷா ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஓம்’ திரைப்படம், ஒரு ஸ்பை-த்ரில்லர் (Spy-Thriller) கதைக்குத் தேவையான சுவாரஸ்யமான தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், எதார்த்தமற்ற திரைக்கதையினாலும் அபத்தமான காட்சி அமைப்புகளினாலும் பார்வையாளர்களைப் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரு சர்வதேச அல்லது பெரிய கடத்தல் கும்பலின் டான், புதிய ஒரு நபரை எப்படிக் கையாள்வார் என்ற அடிப்படைத் தருக்கம் கூடப் படத்தில் மீறப்பட்டுள்ளது. ஒரு உப்பு சப்பு இல்லாத காரியத்திற்காகத் தனுஷை மம்மூட்டி தன் டீமில் சேர்த்துக்கொள்கிறார். அதுமட்டுமின்றி, அத்தனை வருடங்களாகத் தான் கட்டி காத்து வைத்திருந்த மொத்த நெட்வொர்க்கையும் ஒரே நாளில் தனுஷிடம் காண்பிக்கிறார். மரங்களை எங்கு மறைத்து வைத்திருக்கிறோம், எப்படிக் கடத்துகிறோம் என்ற அனைத்து ரகசிய இடங்களையும் அவரிடம் பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

கூட இருக்கும் ஒருவன், “இவன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு, இவன்தான் போலீஸ் இன்ஃபார்மரா இருப்பான் போலிருக்கு” என்று விரல் சுட்டிக் காட்டிய பிறகும் கூட, மம்மூட்டியின் கதாபாத்திரத்திற்கு ஒரு துளி சந்தேகமும் வரவில்லை. “நிஜ உலக குற்ற பின்னணியில் இருக்கும் பெரிய டான்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்; எல்லாரையும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். அதுவும் கூட இருப்பவன் விரல் சுட்டிக் காட்டிய பிறகும் எந்தச் சந்தேகமும் இல்லாமல் இருப்பது ஒரு ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் சிதைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத எதார்த்த மீறலாகும்.”
ஒரு அண்டர்கவர் ஆபீசரின் அடையாளம் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்ற எந்த அடிப்படை விதியும் படத்தில் பின்பற்றப்படவில்லை. அண்டர்கவர் ஆபீசராக இருப்பவர் என்ன தொழில் செய்கிறார் என்பது அவர் சொந்தக் குடும்பத்திற்கே தெரியாது என்பதே எதார்த்தமான நிலை. ஆனால், இந்த படத்தில் தனுஷை நீதிமன்றக் கூண்டில் கொண்டு போய் நிறுத்தி, “நான் ஒரு அண்டர்கவர் ஆபீசர்” என்று பகிரங்கமாக சாட்சியம் (ஸ்டேட்மெண்ட்) கொடுக்க வைப்பது திரைக்கதையின் அடிநாதத்தையே தகர்க்கும் விசித்திரமாகும்.

மேலும், இந்த முழு ஆபரேஷனுக்கும் இன்சார்ஜாக இருக்கும் சாய் பல்லவி, தனுஷ் அண்டர்கவர் வேலையில் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்கிறார். இன்றைய நவீன காலகட்டத்தில், செல்போன்களும் இன்டர்நெட் வசதிகளும் தாராளமாக இருக்கும் போது, அதிகாரி நேரில் வந்து சந்திப்பதாகக் காட்டுவது தொழில்நுட்ப ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் மிகப்பெரிய அபத்தமாகும்.
கதாபாத்திரம் வடிவமைப்பு
படத்திலேயே மிகவும் வலுவான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டிய மம்மூட்டியின் கேரக்டர், கதை செல்லச் செல்ல மிகவும் பலவீனப்படுத்தப்பட்டு டைலூட் செய்யப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் “என் உயிரே போனாலும் என் கூட இருக்கறவங்கள காட்டிக்கொடுக்க மாட்டேன்” என்று கெத்தாகப் பேசும் மம்மூட்டி, “குடும்பத்தோடும் புள்ளைகுட்டியோடும் நிம்மதியாக வாழலாம்” என்று கூறிய அடுத்த கணமே அப்ரூவறாக மாற ஒப்புக்கொள்கிறார்.

அதேபோல, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் கூட இருப்பவன் “சம்திங் பிஷி” (Something fishy) என்று எச்சரித்தும் அதைக் கண்டு கொள்ளாமல் அறியாமையிலேயே சுற்றும் ‘மூர்த்தி அண்ணன்’ கேரக்டரைப் போல, மம்மூட்டியின் கதாபாத்திரமும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, படம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில், தேவை இல்லாமல் அரை மணி நேரம் நீளும் க்ளைமாக்ஸ் ஜெயில் சண்டைக் காட்சியில், என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமலும், தனக்கான சரியான பொசிஷன் இல்லாமலும் அவர் நின்னு முழித்துக் கொண்டிருப்பது மிகவும் பரிதாபமான காட்சியாக அமைந்துள்ளது.
திரைக்கதை
திரைப்படத்தில் எதார்த்தத்தைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், ஆந்திராவில் இருந்து வரும் கதாபாத்திரங்கள் தெலுங்கிலும், மெயின் வில்லனாக வரும் நசரீன் ஷா ஹிந்தியிலும், இடையிடையே கதாபாத்திரங்கள் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். இதற்காகப் படம் முழுவதும் சப்டைட்டில்கள் போடப்பட்டுத் திரையிடப்படுகின்றன. இது பார்வையாளர்களுக்குத் திரைப்படத்தோடு ஒன்ற முடியாமல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அதேபோல, நசரீன் ஷா போன்ற ஒரு பெரிய உச்சக்கட்ட வில்லனும் அவருடைய மகனும் நேரடியாகச் செம்மரம் கடத்தும் இடத்திற்கே வர வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வியும் எழுகிறது. நசரீன் ஷா, சாய் பல்லவி, தனுஷ், மம்மூட்டி என யாரைப் பின்தொடர்வதென்றே தெரியாமல் திரைக்கதை தறிகெட்டு ஓடுகிறது. சுமார் 3 மணி நேரம் ஓடும் இந்தப் படம், ‘ஓடி முடிஞ்சா போதும் சாமி’ என்ற அளவிற்குக் திரையரங்கில் பார்வையாளர்களைப் பெரும் சோர்வுக்குள்ளாக்குகிறது.
படத்தின் கதையமைப்பு ஒரு கட்டத்தில் முற்றிலும் தலைகீழாக மாறி, மிக விசித்திரமான அறநெறி முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. செம்மரக் கடத்தல் செய்யும் ஒரு பெரிய டானைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட அதிகாரிகளே, அந்த டான் “நல்லவர்” என்று முடிவு செய்து அவரைக் காப்பாற்றும் வேலையில் இறங்குகிறார்கள். இறுதியில், அந்த கடத்தல்காரனைக் காப்பாற்றுவதற்காக, காவல்துறையில் இருக்கும் அப்பாவி அதிகாரிகளையும் நேர்மையான அதிகாரிகளையும் சுட்டுக் கொல்லும் நிலைக்குக் கதை தள்ளப்படுகிறது.
சிந்தனைக்கு
‘ஓம்’ திரைப்படம் போன்ற கதைகளை உருவாக்க நினைக்கும் இயக்குநர்களுக்கு ஒரு தெளிவான பாடம் உள்ளது. ஒரு திரைப்படத்தை எடுத்தால் ‘போக்கிரி’ போல முழுக்க முழுக்க வணிகரீதியான மசாலா படமாக எடுக்க வேண்டும்; அல்லது ‘வடசென்னை’ போல எதார்த்தமான, தைரியமான மற்றும் ராவான படமாக எடுக்க வேண்டும். உண்மைக்கு நெருக்கமாக எடுக்கிறேன் என்ற பெயரில் இரண்டும் இல்லாமல் நடுவில் நிற்கும் போதுதான் இதுபோன்ற கதைக் குழப்பங்கள் உருவாகின்றன. நவீன திரைப்படங்களில், மாஸ் கதாநாயகர்களின் நட்சத்திர அந்தஸ்திற்காக (Star Power) சினிமாத் தருக்கத்தையும் (Logic) கதையின் நேர்மையையும் பலிகொடுப்பது எந்த வகையில் நியாயமாகும்!



