VJ சித்ரா உயிரிழப்புக்கு அவரது கணவர் ஹேம்நாத் சந்தேகமே காரணம்.

சின்னத்திரை நடிகை VJ சித்ரா உயிரிழந்ததற்கு  அவரது கணவர்  ஹேம்நாத் சந்தேகமே காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையின்  மூலம் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விக்கு  காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத்பேட்டை காவல்துறையினர் அவரது கணவர் ஹேம்நாத்  சித்ராவின் பெற்றோர்கள்  மற்றும் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பல தரப்பிலும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஹோட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகள் முதல்உதவி செய்ய முன்னதாக வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என தொடர்ச்சியாக விசாரணையில் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் நேரடியாக நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து ஹேம்நாத்த்திடம் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்த அதே நாளில் ஹேம்நாத் பெற்றோரையும் வர வைத்து விசாரணை செய்தனர்.

சித்ரா தரப்பில் அவர் இறுதியாக கலந்துகொண்ட ரியாலிட்டி ஷோ ஊழியர்களை வரவழைத்து விசாரணை நடத்தியதில்  அவர்களுடன் சித்ரா படப்பிடிப்பு தளத்தில் இயல்பாக இருந்ததாகவும் எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொடர் விசாரணையில் ஹேம்நாத் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். வழக்கில் சித்ராவின் பெற்றோரை ஆர்டிஓ தரப்பில் விசாரித்த கைப்பற்றப்பட்ட செல்போனில் பதிவான தகவல்களை வைத்து விசாரணை நடத்தப் பட்ட நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சித்ரா வாழ்வின் சந்தேகப் புயல் வீச ஆரம்பித்தது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

குடிப்பழக்கம் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசும் சித்ராவை சந்தேக கேள்விகள் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் ஹேம்நாத். படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென சென்று தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஹேம்நாத்.  சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நாடகத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் வருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை மையமாக எடுத்துக் கொண்டு சித்ராவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். சம்பவம் நடந்த நாளில் கடைசியாக நடந்த ரியாலிட்டி ஷோவில் நாடகத்தில் கணவராக நடிக்கும் நடிகரும் கலந்துகொண்ட போது அங்கு சென்று சித்ராவை அழைத்து வந்த ஹேம்நாத் காரில் அழைத்து வரும்போதே சந்தேக கேள்விகளால் துளைத்து உள்ளார்

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹோட்டல் அறையில் கடும் வார்த்தைகளால் வசைபாடிக் ஒரு கட்டத்தில் செத்து தொலை என்று கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா கடைசியாக தனது தாயிடம் செல்போனில் பேசி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது முதல் இரண்டு நாட்கள் சோகமாக வந்து சென்ற ஹேம்நாத் அடுத்து மிகவும் மகிழ்ச்சியாக விசாரணைக்கு வந்தது காவல்துறையினரின் சந்தேகத்தை அதிகரித்து உள்ளது. அதன் பேரில் விசாரணையை தீவிரப்படுத்தி போது தான் உண்மை வெளிவந்து ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.