திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்து உள்ளது. ஏடகநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது.
இத்தலத்தின் மூலவர் ஏடகநாதேஸ்வரர், தாயார் ஏலவார்குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தலத்தின் தீர்த்தமாக பிரம தீர்த்தக்குளம் மற்றும் வைகை ஆறு ஆகியவை உள்ளன.

இறைவன் மற்றும் இறைவிகளுக்கு தனித்தனியாக கோபுரம் இவ்வாலயத்தில் உள்ளது. இறைவன் சன்னதி எதிரே ஐந்து நிலை ராஜ கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் கம்பத்தடி மண்டபம் உள்ளது. இங்கு நந்தி பலிபீடம் முதலியவற்றைக் கண்டு இறைவனின் கருவறையை அடையலாம். கருவறையை சுற்றி 63 நாயன்மார்கள் விநாயகர் வள்ளி முருகன் தெய்வானை ஆகிய சன்னதிகள் உள்ளன. கருவறையில் மூலவர் ஏடகநாதர் சுயம்பு லிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார்.
தல வரலாறு:
நின்றசீர் நெடுமாற நாயனார் (எ) கூன்பாண்டிய பாண்டிய மன்னரும் சைவ நாயன்மார்களுள் ஒருவரும் ஆவார். “நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது. இவர் சோழமன்னரின் பாவையாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர் பல்கிப் பெருகி, சமணசமயத்தைப் பரப்பி வந்தனர் சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசியாரின் அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று திருஞானசம்பந்தர் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் “வாழ்க அந்தணர் ” என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”.
இந்த பாடல் திருஞானசம்பந்தர் எழுதிய ’வாழ்க அந்தணர்’ என்ற திருப்பதிகம் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை,
செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பராசரர், பிரம்மா, வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

இந்த கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது வைகை நதிக்கரையில் பித்ரு காரியங்கள் மற்றும் அவர்கள் இறந்த திதி அமாவாசை போன்ற நாட்களில் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. காசிக்கு நிகரான கருதப்படுவதால் முன்னோர் வழிபாடுகள் இத்தளத்தில் செய்யலாம். நம் முன்னோர்களின் முக்தி அடையை மோட்ச தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளது. இக்கோவிலில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தீர்த்த பிரமை நீங்குவதை தலத்தின் தனி சிறப்பாகும்.