நிரம்பியது செம்பரம்பாக்கம் ஏரி. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுமா?

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி தொடர்ந்து நிரம்பி வருகிறது. ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. இன்னும் சில தினங்களில் நீர் மட்டம் ஆனது 21 அடியே எட்ட வாய்ப்பு உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாக இருந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழை காரணமாகவும் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடி எட்டியவுடன் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரி திறக்கப்படுவது வழக்கம். தற்போதைய சூழலில் ஏரி என்னேரமும் 21 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கப்படுவதால் ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 2630 கன அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 390 கன அடியாகவும் உள்ளது.
ஒருவேளை ஏரியில் நீர் திறந்து விடப்பட்டால் ஏரி நீர் வரும் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழக அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஏரி நீர் வழிந்தோடும் அடையாறு ஆற்றின் கரையோரம் பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீரானது நேரடியாக கடலில் கலப்பதற்கு தமிழக அரசு வெள்ள நிவாரண தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்த ஆண்டு ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியது. ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆகியவை சென்னையை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் சென்னை மற்றும் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி சென்னையில் 50 சென்டிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 50 ஆயிரம் கன அடி நீர் அணையின் பாதுகாப்பு கருதி அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டதால் அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், மணப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் சென்னையை புரட்டி போட்டது யாராலும் மறக்க முடியாது.